Saturday 3 November 2012

மாணவர்களே பள்ளியை நடத்தும் அவலம்



















மூன்றாண்டுகளுக்கு முன்னால் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அனைத்து மாநில அரசுகளும் இச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள வசதிகளைப் பள்ளிகளில் நிறைவு செய்ய வேண்டும் என்றும் கூறி யுள்ளது. ஆனால் கழிப்பறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் தொடங்கி கட்டட வசதி, ஆசிரியர் பற்றாக்குறை வரை பல்வேறு   குறை பாடுகள் நீடிப்பதைச் சென்றவாரம் சென்னையில் நடந்த பொது விசாரணை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.
தேசியக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் நடத்திய இந்தப் பொதுவிசாரணையில், பத்து மாவட்டங்களைச் சேர்ந்த 250 பஞ்சாயத்துகளிலிருந்து 57 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பள்ளிகளின் பிரச்னைகள் இந்த பொது விசாரணையில் பேசப்பட்டன. உள்கட்டமைப்பு வசதிகள், மதிய உணவுத்திட்டம், பள்ளி நிர்வாகக் குழு அமைத்தல், ஆசிரியர் & -மாணவர் போதாமை குறித்த பிரச்னைகள் குறித்து பதில்சொல்வதற்காகத் தமிழக அரசின் சார்பில் பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சபிதாவும் கலந்துகொண்டு பதில்சொன்னது சாதகமான விஷயம் என்கிறார் இப்பொதுவிசாரணை நடுவர்களில் ஒருவரான முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி.
“கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் பள்ளி நிர்வாகக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் எந்தப் பள்ளியிலும் இது அமைக்கப்படவேயில்லை. 75 சதவிகிதம் பெற்றோர் பிரதிநிதிகளும், 2 5 சதவிகிதத்தில் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சமூகப்பிரதிநிதிகள் இருத்தல் வேண்டும். அவர்கள் தான் பள்ளியின் உள்கட்டுமான வசதிகளைத் திட்டமிட்டுச் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும். கல்வி என்பது அதிகாரிகள் கையில் இல்லாமல் மக்கள் கையில் அப்போதுதான் செல்லும். உலகில் தரமான கட்டாய இலவசக்கல்வியை வெற்றிகரமாக அமல் செய்திருக்கும் நாடுகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகள் வழியாகவே நிர்வகிக்கின்றன. அனைவருக்கும் கல்வித்திட்டத்தில் கிராமக்கல்விக் கமிட்டி என்று ஒரு குழு அமைக்கப் பட்டது. அதுமட்டுமே இப்போது நடைமுறையில் இருக்கிறது. அந்தக் குழுவுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவை கலைக்கப்பட்டு முறையான பள்ளி நிர்வாகக் குழு அமைக்கப்பட வேண்டும்” என்கிறார்.
தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லையென்பதும் இந்தப் பொதுவிசாரணைக்காக மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்ததாகக் கூறுகிறார் இதன் ஒருங்கிணைப்பாளரான, மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஜி.கணேசன். “பல பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லாமல் இருக்கிறது. கழிப்பறைக் கட்டடம் இருக்கும் பள்ளிகளில் போதிய பராமரிப்பின்றி மிகவும் அருவருப்பான சூழ்நிலையில் இருக்கின்றன. சில பள்ளிகளில் மாணவர்களின் அளவுக்கு ஏற்ப கழிப்பறைகள் இல்லை. 300 மாணவர்களுக்கு ஒரே ஒரு கழிப்பறை மட்டும் போதுமா? கழிப்பறைகள் இல்லாத பள்ளிகளில் மாணவர்கள் வெளியே சென்று சமாளித்துக் கொள்கின்றனர். மாணவிகளின் பிரச்னைதான் கழிப்பறை விஷயத்தில் மிகவும் கொடுமையானது. பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாததால், தண்ணீர் குடிக்காமலேயே பள்ளி நேரத்தைக் கழிக்கிறார்கள்.” என்கிறார்.
டெல்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தொடர்ந்த வழக்கு ஒன்றில் அக்டோபர் 3 ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீரை அனைத்து மாநில அரசுகளும் ஆறு மாதங்களில் உறுதி செய்யவேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 46 சதவிகிதம் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லையென்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தப் பொதுவிசாரணையில் குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் சில மாணவர்கள் ஆசிரியரோ, தலைமை ஆசிரியரோ இல்லாமலேயே பள்ளிகளை மாணவர்களே பெரும்பாலும் நடத்துவதாகத் தெரிவித்தது அங்கிருந்த அரசு அதிகாரிகளுக்கே புதிய தகவலாக இருந்தது. மாணவர்களே காலையில் பிரார்த் தனை நடத்தி மாணவர்களே மணி யடிக்கும் நடைமுறைகளும் உள்ள தாகத் தெரியவந்தது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள்தான் அதிகம் கவனிப்பாரற்று இருப்பதாக வசந்தி தேவி வருத்தம் தெரிவிக்கிறார். “இப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், குழந்தைகளாகவே மதிக்கப் படுவதில்லை. ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஒரு தலைமை ஆசிரியர் விடுமுறை போட்டுவிட்டு சம்பளமும் வாங்கிக்கொண்டு இந்த குழந்தை களுக்குக் கல்வி வாய்ப்பு கெடுவது பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் தனது வீட்டில் உட்கார்ந்திருக்கும் நிலைமையை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்” என்கிறார். ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் நிலை இதுவென்றால், ஆதிதிராவிட மாணவர்களுக்கென அமைக்கப்பட்ட அரசு விடுதிகளின் நிலையோ இன்னும் மோசம். பாம்புகள், நாய்கள், மாடுகள் பகல் நேரத்தில் விடுதி சமையலறை வரை செல்வது சகஜம் என்கிறார் மனித உரிமை ஆர்வலர் மணிமாறன்.
ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணியாளர் தட்டுப்பாடு இருப்பதும் இந்த பொதுவிசாரணையில் தெரியவந்துள்ளது. குறைந்தபட்சம் 500 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசு அதிகாரிகளே தெரிவித்தனர். கடலூரில் உள்ள அரசுப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பள்ளி ஆய்வகத்தில் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். ஆய்வகப் பணியாளர்கள் இல்லாததால் அப்பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் மாணவர்களிடமே அதைச் சுத்தம் செய்யச் சொன்னதுதான் இந்த இறப்புக்குக் காரணம். பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட தற்போது மேம்பட்டிருப்பதாக கூறுகிறார் கல்வி உரிமை ஆர்வலரான மு.முருகேஷ். இன்று வசதிகள் மேம்பட்டிருக்கின்றன. பள்ளித் தளவாடங்களைப் பயன் படுத்து வதிலும் பராமரிப்பதிலும்தான் சுணக்கம் நிகழ்கிறது” என்கிறார்.
பள்ளிக்கு வரும் குழந்தைகள் தொடர்ந்து வகுப்பறை வன் முறைகளுக்கு  உள்ளாவதும், விரக்தியில் தற்கொலை செய்த சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மாணவிகள், ஆசிரியர் களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் புகார்களும் சொல்லப்பட்டன. இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்ஹா, ‘துறைசார்ந்த நடவடிக்கையோடு, குற்றவழக்கும் அத்தகைய ஆசிரியர்கள் மீது பதியப்பட வேண்டும்” என்றார். இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழைக்குழந்தை களுக்கான 25 சதவிகித இட ஒதுக்கீடு அமல்செய்யப்படும் விஷயத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை என்பதை இந்தப் பொதுவிசாரணை உறுதிசெய்தது. இந்தப் பொது விசாரணையில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் செந்தமிழ் செல்வி பதில் சொன்னபோது, குழந்தைகள் சேர்க்கை மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும்  பதில் சொன்னார்.
“இச்சட்டமே கல்வி உரிமையை குழந்தைகளுக்குக் கட்டணமின்றி உறுதிசெய்யும் சட்டம்தான். தனியார் பள்ளிகளைப் பாதுகாப்பது அல்ல.” என்று வசந்திதேவி விரக்தியாக கூறுகிறார். கட்டாயக் கல்விச் சட்டம் அமலானால் அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் நியமனம், நிதி ஒதுக்கீடு, பள்ளி நிர்வாகக்குழு மூலம் வெளிப்படைத் தன்மை என்று பல வளர்ச்சிகள் ஏற்படும். ஆனால் தமிழக அரசு எவ்வளவு முடியுமோ அந்த அளவு கட்டாயக் கல்வி விஷயத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வரு கிறது.  இலவச கட்டாயக் கல்விக்கு மத்திய அரசு தன் பங்காக மாநிலங் களுக்கு தரவேண்டிய பணத்தையும் படிப்படியாக குறைத்து வருவதாகவும் வசந்தி தேவி கவலை தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் உள்கட்டுமானம் தொடங்கி பள்ளிகள் அங்கீகாரம்  அங்கீகாரம் வரை தமிழக அரசு பல நடவடிக்கை களில் பின்தங்கியே உள்ளது.    









No comments:

Post a Comment