Tuesday 27 November 2012

நம் நாட்டுப் பல்கலைக் கழகங்களால் முடியாதா என்ன?

கில பாராளுமன்றத்தில் நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடக்கும் வெளிநாட்டுப் பல்கலைக் கழக மசோதாவை நிறைவேற்ற, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அல்லும் பகலும் இடைவிடாமல் பாடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளிடமிருந்து கணிசமான அளவிற்கு ஆட்சேபனைகள் இருந்தாலும், காங்கிரஸின் ராஜ்யசபா உறுப்பினரும் தன்னுடைய மறுப்பைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போதுமான ஆசிரியர்கள் இல்லாத சூழலில் அயல்நாட்டு பல்கலைக் கழகங்களின் வருகை, உயர் கல்வியின் நிலை மேலும் பாழ்பட்டு விடுமே என்ற தன் கவலையை அவர் தெரிவித்தார். 

உலகத் தரத்தை எட்டுவது என்பது நம்மால் முடியாததல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.பாரத அரசு 1996-ல் டாக்டர் டி.ஒய்.பாட்டீல் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. அதில் நானும் ஒரு உறுப்பினன். இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களோடு இணைந்து செயல்படும் நம் நாட்டுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் நம்மோடு அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் கைகோர்த்து இயங்கும் கல்வி நிலையங்கள் ஆகியவற்றைத் தொடங்குவதற்குரிய வழிமுறைகளைச் சிந்திப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டது. அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களோடு இணைந்து செயல்பட்டால் உயர் கல்வியின் தரம் உயரும் என்பது ஒரு மாயை என்பதற்கு போதிய ஆதாரங்களைத் தந்தேன். அமெரிக்காவிலேயே வெளியிடப்பட்ட அறிக்கையைச் சுட்டிக் காட்டினேன். 

அங்கே 17 வயது நிரம்பிய இளைஞர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு, ஆப்ரஹாம் லிங்கன்தான் மேம்பாட்டுப் பிரகடனத்தை (Emancipation Proclamation) எழுதினார் என்பதே தெரியவில்லை. பாதிப் பேருக்கு ஜோசப் ஸ்டாலின் யார் என்றே தெரியவில்லை. முப்பது சதவிகிதப் பேருக்கு ஐரோப்பிய வரைபடத்தில் பிரிட்டன் எங்கேயுள்ளது என்று குறிக்கத் தெரியவில்லை. உயர் கல்வியின் சரித்திரக் குறிப்பேடு கட்டுரையொன்றில் (Chronicle of Higher Education) இத்தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் போட்டி கடுமையாகி வரும் இந்தக் காலகட்டத்தில், கல்லூரித் தலைவர்கள் அனைவரும் மாணவர்களைச் சேர்க்கும் இயக்குனர்களையெல்லாம், கால்பந்தாட்ட பயிற்சியாளர்களைப் போல் நடத்துகிறார்கள். எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியாதவர்களையெல்லாம் வாய்க்கு வந்தபடி ஏசுகிறார்கள். மாணவர்களைக் கவர்வதற்காக தேர்வு மதிப்பெண்களையெல்லாம் திரிக்கிறார்கள். மாற்றுகிறார்கள். தங்கள் எண்ணம் நிறைவேற எதையும் செய்யத் தயங்குவது இல்லை. அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் கல்லூரி மாணவர் சேர்க்கை என்பது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை ஆகிவிட்டது. எனவே, ‘அமெரிக்கக் கல்வி முறை உயர்வானது. பிரமாதமானது. அதற்கு முன்னால் நாம் நிற்க முடியாது’ என்று பேசுவதை உடனடியாக நாம் நிறுத்த வேண்டும். 

இதையெல்லாம் மேற்கோள் காட்டி என்னுடைய மாறுபட்ட கருத்தை, காரண காரியத்தோடு பதிவு செய்தேன். அந்தக் குழுவின் தீர்மானம் கடைசியில் கிடப்பில் போடப்பட்டது. இவ்வளவு இருந்தும், பல அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும், கண்ணைக் கவரும் கட்டிடங்களிலும் எந்தவித அதிகாரபூர்வமான ஆணையும் இல்லாமல் இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்படி எந்தவிதமான ஒழுங்கு முறையும் இல்லாமல் கேள்வி கேட்பார் இன்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அயல்நாட்டு பல்கலைக் கழகங்களைப் பற்றி, நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றை 1998-ல் தாக்கல் செய்தேன். அது இன்னும் நிலுவையில் உள்ளது. 

நான் எழுதிய முந்தைய கட்டுரையில், இந்தியா பல்வேறு அம்சங்களில் முதலாவதாக விளங்கியது என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளேன். ‘உயர் கல்வியின் தரத்தை உயர்த்தப் போகிறோம்’ என்ற பெயரில், அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களை உள்ளே அனுமதித்தால், குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொண்டதற்குச் சமமாகும். இதை முதலில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் உள்ள சிலர் புரிந்து கொள்ள வேண்டும். இது தவறான போக்கு என்பதை விளக்க சில வெளிநாட்டு நிகழ்ச்சிகளையும் எடுத்துக் கூற விரும்புகிறேன். 

பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் ஒரு கோலாகலமான மாதம் என்பது தெரியும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பிற மேற்கத்திய நாடுகளில் உள்ளோர் கிறிஸ்துமஸைக் கொண்டாடும் உற்சாகத்தில் இருப்பார்கள். 2010 டிசம்பர் 15–ஆம் தேதி லண்டன் மாநகரமே கோபக்கனலில் கொழுந்து விட்டெரிந்தது. காரணம், 25,000 மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு அராஜகத்தின் எல்லைக்கே சென்றனர். சார்லஸ் மன்னர் பயணம் செய்த கார் கட்டுக்கடங்காத கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டது. 

மன்னரின் கையெழுத்தை வாங்குவதற்காகக் காத்திருக்கும் பட்டாளம் என்று அவர்களையெல்லாம் நினைத்து விடக் கூடாது. காவல் துறையினரின் வாகனங்கள் மாணவர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன. சீருடைகள் களவாடப்பட்டன. தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் பலரும் காயமடைந்தனர். இந்தப் பதற்றத்திற்குக் காரணம் – 2010-ல் வெளியிடப்பட்ட ப்ரௌன் மறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், கல்லூரிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதுதான். இங்கிலாந்திலேயே இப்படியென்றால், அமெரிக்காவின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 
               இந்திய வணிகப் பேரவை, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டுப் பல்கலை கழகங்களை இங்கே அனுமதித்தால் 75 சதவிகித மாணவர்கள் நம் நாட்டிலேயே தங்கி விடுவார்கள். அதனால் இந்தியா 7.5 பில்லியன் அமெரிக்க டாலரை மிச்சப்படுத்தலாம் என்று கூறுகிறது. அன்னியச் செலவாணி இந்த வகையில் நமக்கு ஆதாயமாகும். ஆனால், இது வெறும் வாய்ப்பந்தல்தான். நடைமுறைக்குச் சரிப்பட்டு வராத, இந்தக் கொள்கைக்கு ஆதரவாளர்கள் அதிகம். 80 சதவிகிதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குச் செல்வதெல்லாம் பட்ட மேற்படிப்பு படிக்கவும் விடுமுறையைக் கழிக்கவும்தான். 

இந்தியாவிற்கு வெளியே தங்கள் படிப்பிற்கேற்ற வேலை வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ளவே செல்கிறார்கள். வெளிநாட்டில் கல்வி பயில்வது என்பது, உலக வேலை வாய்ப்பிற்கு ஓர் அனுமதிச் சீட்டு என்றே அவர்கள் நினைக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, அகில இந்திய வணிகப் பேரவை, ‘மாணவர்கள் இந்தியாவிலேயே தங்கி விடுவார்கள்’ என்று எப்படி எதிர்பார்க்க முடிகிறது? 

இங்கே ஹார்வர்டோ, ஸ்டேன்போர்டோ ஒருநாளும் வரப் போவதில்லை. முகம் தெரியாத பல்கலைக் கழகங்கள்தான் வரக் காத்திருக்கின்றன. இத்தகைய பல்கலைக் கழகங்கள் தரம் மிக்க ஆராய்ச்சிக் கல்வியையும், பட்ட மேற்படிப்புக் கல்வியையும் தரக்கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்தவையா என்றால் அதுதான் இல்லை. வல்லமை பெற்றவர்கள் வரத் தயங்குகிறார்கள், ஏன்? நாம் சிந்திக்க வேண்டும். வரவு செலவு அறிக்கையில் கல்விக்குரிய ஒதுக்கீட்டிலுள்ள கடுமையான வெட்டும், உயர்ந்து வரும் கல்விக் கட்டணமுமே அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களை மாற்று வழி கண்டுபிடிக்கக் கட்டாயப்படுத்துகின்றன. பணம் சம்பாதிக்க புதிய புதிய சந்தை உத்திகளைப் பற்றி நினைத்துப் பார்க்கிறார்கள். இப்படிக் காசேதான் கடவுளடா என்று இருப்பவர்களால், பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிக் கல்வியைத் தரம் குறையாமல் இந்தியாவில் தர முயற்சிப்பார்களா? அது ஒருபோதும் இல்லை. 

வெற்றிக்கொடி நாட்டிய அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்கள் எல்லாம், தங்கள் வருமானத்துக்கு பிற நாட்டு மாணவர்களின் பட்ட மேற்படிப்புக் கல்விக் கட்டணத்தையே பெரிதும் நம்பி இருக்கின்றன. இந்தியாவும் சீனாவும்தான் இந்நாடுகளுக்கு மாணவர்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் உள்ளன. புத்திசாலித்தனம் வாய்ந்த எந்த அன்னியப் பல்கலைக் கழகமும் இந்தியாவில் பட்ட மேற்படிப்புக் கல்வியை வழங்க முன் வராது. அது தற்கொலைக்குச் சமமாகும். நுனி மரத்திலிருந்து கொண்டு அடி மரத்தை வெட்டுவது போலாகும் அச்செயல். பிறகு என்னதான் செய்வார்கள்? இந்தியாவில் உள்ள சாதாரண கல்லூரியைப் போலக் காலங்காலமாக உள்ள கிளிப்பிள்ளைக் கல்விமுறையைத்தான் பின்பற்றுவார்கள். கல்விக் கட்டணமோ உச்சாணி கிளையை எட்டிப் பிடிக்கும். அவர்களையெல்லாம் எந்தக் கட்டுப்பாட்டிற்கும் சட்டத் திட்டத்திற்குள்ளும் கொண்டு வர முடியாது. ஏனென்றால், அவர்கள்தான் அயல்நாட்டவர்கள் ஆயிற்றே? நடக்குமா? எனவே, அகில இந்திய வணிகப் பேரவையின் சேமிப்புக் கோட்பாடு ஒரு கானல் நீராகத்தான் இருக்கும். 

பெரிய பெரிய வரவு செலவுத் தணிக்கையாளர்கள் அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் பணத்தைக் கொண்டு சேர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அந்தக் கலையில்தான் அவர்களுக்கு நல்ல பயிற்சி இருக்கிறதே! எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போட்டு, தன்னலம் ஒன்றை மட்டுமே கொண்டு, பண வேட்டையாடுவதுதான் அவர்களின் குறிக்கோள். இது நிதிக் கண்ணோட்டம். கூடாரத்தில் ஒட்டகத்திற்கு இடம் கொடுத்ததை போல வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்தவர்களை இங்கே அனுமதித்தால், இந்தியாவில் உள்ள ஆசிரியர்களை கவர்ந்து, இங்கு இருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறையை ஏற்படுத்தி விடுவார்கள். தற்பொழுது இருக்கும் பற்றாக்குறையே பெரிது. மேலும் நிலைமை மோசமாகி விடும். இப்படிப்பட்ட ஒரு சூழல் இந்தியாவின் உயர்கல்வி முறையை உயர்த்தி விடுமா? நிச்சயமாக இல்லை. எல்லாம் மாயா பஜார்தான். 

அயல்நாட்டுப் பல்கலைக் கழகத்தவர்களின் உதவி இல்லாமலேயே நம் உயர் கல்வியின் தரத்தை வலிமைப்படுத்த முடியாதா? ஏன் முடியாது? கட்டாயம் முடியும். எத்தனையோ வழிகள் உள்ளன. சீனாவின் ஆசைத் திட்டம் 211 மற்றும் 985, நூறு உயர் பல்கலைக் கழகங்களையும், நாற்பது உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களையும் ஏற்படுத்துவதுதான். இது நல்ல நோக்கம். சீன நாட்டின் தனித் தன்மையைப் பிரதிபலிக்கும் பல்கலைக் கழகங்களை ஏற்படுத்துவதில்தான் அது கண்ணும் கருத்துமாக உள்ளதே தவிர, வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இறக்குமதி செய்வது அதன் நோக்கம் இல்லை. சீனாவை விட்டு இளைஞர்கள் வெளியேறக் கூடாது என்பதற்காக, அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களை வரவழைக்கவும் அவர்கள் நினைக்கவில்லை. சீனாவின் முன்மாதிரியை இந்தியாவும் பின்பற்ற வேண்டும். 
வெளிநாட்டவர்களுக்குத் தாரைவார்ப்பதை விட்டுவிட்டு, உள்நாட்டிலேயே, அதன் தனித்தன்மை கெடாத வகையில், உலகத் தரமிக்க பல்கலைக் கழகங்களை நம்மால் உண்டாக்க முடியும். அப்படியே அவர்களை அனுமதிப்பதாக இருந்தாலும், அவர்கள் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிக் கல்வியை எடுத்து கொள்ளட்டும். பத்தாண்டுக் காலம் தங்களுடைய ஆசிரியர்களை கொண்டே கூட, அவர்கள் நடத்திக் கொள்ளட்டும். அவர்களுடைய உண்மை தன்மையை சோதித்தறிய இது ஒரு வாய்ப்பாக அமைவதோடு, இந்தியக் கல்வி முறைக்கு, கற்பிக்கும் நல்ல ஆசிரியர்களை வழங்கிய பெருமையும் அவர்களுக்குக் கிடைக்கும். 

சமீப காலத்தில் அரசு கொல்லைப்புற வழி ஒன்றை ஏற்படுத்தி, அவர்களை இந்தியாவுக்குள் வர முயற்சி மேற்கொண்டது. நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்தை அவற்றுக்கு வழங்கி, மெதுவாக இந்தியாவிற்குள் வர பச்சைக் கொடி காட்டியது அரசு. ஆனால், பல்கலைக் கழக மானியக் குழுவே இதற்கு மறுப்புத் தெரிவித்தது. எதிர்ப்பு பூதாகாரமாகக் கிளம்பியதைப் பார்த்து அரசு மெதுவாகப் பின் வாங்கியது. 500 பல்கலைக் கழகங்களை மட்டுமே அனுமதிப்பது என்றும் முடிவு செய்து, அதற்குரிய சட்டத் திட்டங்களை வகுக்கத் தொடங்கியது. இந்த அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்கள், மதிப்பீடு செய்யப்பட்ட இந்திய பல்கலைக் கழகங்களோடு ஒருங்கிணைந்துதான் செயல்பட வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. இது ஏற்கத்தக்கதே. 

அமெரிக்காவும் இங்கிலாந்தும் உயர்கல்வி நிலையில் பல சோதனைகளைச் சந்திக்கும் வேளையில், இந்தியாவும் தன்னை ஆத்ம சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். மெச்சத் தகுந்த உயர் கல்வி முறையைத் தொடங்க இதுவே சரியான சமயம், நம்மிடத்தில் இல்லாத மூலாதாரங்களா? அவற்றையெல்லாம் மனதில் கொண்டு, உலகத் தரம் மிக்க பல்கலைக் கழகங்களை உருவாக்க வேண்டும். முதலில் இந்தியாவுக்குத் தேவைப்படுவது ஆசிரியர்களின் தரம் குறித்த தேசிய அளவிலான வலுவான கொள்கை. அரசு விழித்துக் கொள்வதற்கு இதுதான் நல்ல சந்தர்ப்பம். நம் நாட்டில் ஆசிரியர் கல்வி முறையில் அதலபாதாளத்தில் உள்ள மேடு பள்ளங்களைக் கண்டறிந்து, அதற்குப் புனர்ஜென்மம் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செயல்படுத்துவதில் எது தடையாக இருக்கிறது, அதைக் களைய என்ன வழி என்பதை இனிவரும் கட்டுரையில் பார்க்கலாம். 

– பேராசிரியர் ஆர். சேதுராமன்,
துணை வேந்தர், சாஸ்த்ரா பல்கலைக் கழகம்
 

No comments:

Post a Comment