Tuesday 27 November 2012

இந்தியாவில் ஆசிரியர் கல்வி – ஒரு கண்ணோட்டம்

இந்தியாவில் ஆசிரியர் கல்வி – ஒரு கண்ணோட்டம் 


மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2004–ல், NCTE –ன் மண்டல இயக்குநர் அலுவலகங்களைப் பற்றிக் கூறப்பட்ட லஞ்சப் புகார்களை விசாரிக்க சிறப்புக் குழுக்களை அமைத்தது. NCTE –ன் மண்டல இயக்குனரகம், நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ள கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது என்பதை அக்குழு தன்னுடைய அறிக்கையில் சுட்டிக்காட்டியது. பார்வையிடச் சென்ற ஆய்வுக்குழு உறுப்பினர்களிடம், தேவையான எந்த ஆவணத்தையும் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் சமர்ப்பிக்கவில்லை. இல்லாத கல்லூரிகளை இருப்பது போல் காட்டி NCTE அனுமதி வழங்கி விடுகிறது என்பதை, இக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வடமாநிலத்தின் கவர்னர் ஒருவர் NCTE –ன் செயல்பாடு குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். ‘மாட்டுக்கொட்டகை ஒன்றில் இயங்கும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றிற்கு NCTE –அங்கீகாரம் அளித்துள்ளது’ என்று குற்றம் சாட்டினார். எந்தவிதமான கால ஒழுங்கு முறையையும்NCTE பின்பற்றியதாகத் தெரியவில்லை. ஒருபுறம் அங்கீகாரத்திற்காக ஆண்டாண்டுக் காலமாக ஆய்வுக்குழுவின் வருகைக்காக வழிமேல் விழி வைத்துப் பல கல்லூரிகள் காத்திருந்த நிலையில், மறுபுறம் சில நாட்களிலேயே சில கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டன. ஆய்வுக்குழுவின் நேரடி வருகை இல்லாமலேயே சில கல்லூரிகள் அங்கீகாரம் பெற்றன என்று, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் நியமனம் செய்யப்பட்ட குழு கூறியுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் என்று வசூலிக்கப்பட்ட தொகை, அந்த வருடம் (2007) பதினைந்து கோடி ரூபாயையும் தாண்டி விட்டதாக அது கூறுகிறது. ஆசிரியர் கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி, தேசிய ஆசிரியர் கல்விக் கழக வங்கிக் கணக்குகளில் உறங்குகின்றன. அது வங்கியின் நடப்புக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் சென்று நீதி கேட்டுப் பலர் வழக்குத் தொடர்ந்தனர். சென்னை உயர் நீதிமன்றம், தென் மண்டல NCTE இயக்குனரை நீதிமன்ற அவமதிப்பிற்காக நேரே ஆஜராகச் சொன்னதை இங்கு குறிப்பிடலாம். மண்டலக் குழு கூட்டிய கூட்டத்திலும், அதன் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சாடிக் கொண்டனர். அது மட்டுமில்லாமல் இத்தகைய கூட்டத்தை முறையாக நடத் தியதாகவும் தெரியவில்லை என்று இக்குழுவின் அறிக்கை கூறுகிறது.

பல்வேறு திசைகளிலிருந்து புகார்கள் குவிவதைக் கண்ட மத்திய அரசு, NCTE –ன் செயல்பாடுகளை மறுமதிப்பீடு செய்ய குழு ஒன்றை அமைத்தது. மனிதவள மேம்பாட்டுத் துறையின் முன்னாள் செயலாளர் சுதீப் பானர்ஜி இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இக்குழு தன் அறிக்கையை 2008–ல் சமர்ப்பித்தது. ’NCTE –யில் திட்டமிடலோ, ஒருங்கமைப்போ’ கல்வி தொடர்பான நடவடிக்கைகள் பற்றிய தரவுகள் தருவதோ ஏதும் இல்லை என்று இக்குழு திட்டவட்டமாகச் சொல்லிவிட்டது. திட்டமிட்ட வளர்ச்சி, கல்விசார் ஆய்வு, புதுமை நாட்டம் ஆகிய அம்சங்களை இது முற்றிலும் உதறித் தள்ளிவிட்டது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு வெறும் அங்கீகாரம் வழங்கும் ஆணையமாக மட்டுமே இது செயல்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஆசிரியர் கல்வி – ஒரு கண்ணோட்டம் 
புகழ்வாய்ந்த ‘நியூயார்க் டைம்ஸ்’ என்ற தினசரி, ஜனவரி 2012–ல் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ஹார்வர்டு மற்றும் கொலம்பிய பல்கலைக் கழகங்களின் பொருளாதார நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை அது வெளியிட்டது. அங்கே, ஒரு நல்ல ஆசிரியர் பள்ளியை விட்டு விலகுகிறார் என்று தெரிய வந்தால், பெற்றோர்கள் பீதியடைந்து, அவர் மேலும் ஒரு வருஷம் தொடர்ந்து இருப்பதற்கு 1,00,000 அமெரிக்க டாலரை ஊக்கத் தொகையாக அளிக்க முன்வருவார்களாம். காரணம், அந்த ஆசிரியரால் அவர்களுடைய பிள்ளைகள் அடையும் பயன் அவர்கள் அளிக்கும் தொகையை விட அதிகமாம். இதேபோல, ஒரு மோசமான ஆசிரியர் பணியில் இருந்தால், அந்த ஆசிரியருக்கும் அதே தொகையை அளித்து, பணியை விட்டு வெளியேற்றவும் பெற்றோர்கள் முன் வருவார்கள். காரணம், ஒரு மோசமான ஆசிரியர் என்பவர், பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு ஒரு அபாயம் என்று கருதுவதால்தான். இவ்வாறு, தரம் தாழ்ந்த கற்பித்தலுக்கெல்லாம் முடிவு கட்டுவது தேவை என்பதை நினைக்க வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.

‘நல்ல ஆசிரியர்களுக்கு அள்ளிக் கொடுங்கள்! மோசமானவர்களுக்குக் கிள்ளிக் கொடுங்கள்!’ என்று நான் சொல்ல மாட்டேன். ஆசிரியர் தொழிலை வாழ்வாதாரத்திற்குரிய ஒன்றாகத் தேர்ந்தெடுக்கும்போது, அதனுடைய மதிப்பு எத்தகையது என்பதை நாம் உணர வேண்டும். ஆசிரியர் தொழில் எவ்வளவு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியது என்பதை விளக்க உதாரணங்கள் தருகிறேன். பிரணாப் முகர்ஜி மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, தற்போதைய பிரதம மந்திரியாக இருக்கும் மன்மோகன் சிங், ரிஸர்வ் வங்கியின் கவர்னராக இருந்தார். நிலைமை மாறியபோது மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராகச் செயல்பட்டார் பிரணாப் முகர்ஜி. ஆனால், இவ்விருவருக்கும் எல்.கே.ஜி.யில் பாடம் கற்பித்த ஆசிரியர்கள் இன்று உயிரோடு இருந்தால் கூட, பிரணாப் முகர்ஜியையும், மன்மோகன் சிங்கையும் தங்கள் மாணவர்கள் என்றே கூறுவார்கள்.

காரணம், ஆசிரியர் – மாணவர் உறவு என்பது என்றுமே மாறாதது. ‘டெல்லிக்கு ராஜாவானாலும் தாய்க்கு பிள்ளை’ என்ற வாசகத்திற்கேற்ப, மாணவன் என்பவன் மாணவன்தான். இதை, எந்தக் காலத்திலும் ஓர் ஆசிரியர் பெருமிதத்தோடு கூறிக் கொள்ள முடியும். அப்துல் கலாம் கூட தனக்கு சயின்ஸ் பாடம் கற்பித்த ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயரை நன்றியோடு நினைக்கிறார். முதலமைச்சர் ஜெயலலிதா, தனது பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு, தன்னுடைய ஆசிரியருக்கு அழைப்பு விடுத்திருந்தார். பிரபல வழக்கறிஞர் நானி பல்கிவாலா தன்னுடைய ‘வீ த பீப்பிள்’ (We the People) என்ற புத்தகத்தில் கூட, தன்னுடைய ஆசிரியரைப் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரையே எழுதியுள்ளார்.

ஆசிரியர் கல்வியைப் பற்றி அமெரிக்கக் குழு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘மக்களின் தரத்தை வைத்துத்தான் நாட்டின் தரம் மதிப்பிடப்படுகிறது. மக்களின் தரம் அவர்கள் பெற்ற கல்வியின் அடிப்படையில் அமைகிறது. ஆசிரியர்களின் தரத்தைக் கொண்டுதான் கல்வியின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது’ என்பது அவ்வறிக்கையின் சாராம்சம். முறையான ஆசிரியர் கல்வி முறையின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. ஏனென்றால், ஆசிரியர் கல்வி என்பது நாட்டின் வளர்ச்சியில் நேரடியான பாதிப்பை உண்டாக்குகிறது.

புனிதமாகப் போற்றத்தக்க ஆசிரியர் தொழில், இன்று, அவலநிலைக்குத் தள்ளப்பட்டு, வேறு எந்த வேலையும் கிடைக்காதபோது வேண்டா வெறுப்பாகப் பெரும்பாலானோர் நாடுகிற தொழிலாகி விட்டது. மாதா – பிதா – குரு – தெய்வம் என்று, வணங்கத்தக்க வரிசையில் உள்ள குருவுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் குறைந்து விட்டது. ‘குருபக்தி’ என்கிற சிந்தனையே நாளுக்கு நாள் மறைந்து வருகிறது. குருவுக்கும் பக்திக்கும் புத்துயிர் கொடுக்க வேண்டிய தேவை உண்டாகி விட்டது. 2006–ல் தேசிய கல்விக் குழு அவசரச் சட்டம் ஒன்றைப் பிரகடனப்படுத்தியது. இதன்படி, அங்கீகாரம் வழங்கப்படாத ஆசிரியர் பயிற்சிக் கழகங்களுக்கு அவை விண்ணப்பித்த நாளிலிருந்து அனுமதி வழங்கப்பட்டது. இதற்குக் காரணம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச், அங்கீகாரம் பெறாத 115 ஆசிரியர் பயிற்சி நிலையங்களில் பயின்ற மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தீர்ப்பு வழங்கியது. NCTE யினால் அங்கீகரிக்கப்படாத கல்வி நிலையங்களில் பயின்ற மாணவர்கள், தங்களிடம் உள்ள சான்றிதழ்களைக் கொண்டு எந்தக் கல்வி நிலையத்திலும் வேலை வாய்ப்புப் பெறத் தகுதியற்றவர்கள் என்றும் தன் தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டது. இத்தீர்ப்பு 2006 ஏப்ரலில் வழங்கப்பட்டது.

NCTE –ன் அனுமதி பெறாமல் பி.எட். பட்ட வகுப்புகளை நடத்திய கல்வி நிலையங்களின் அனுமதியை ரத்து செய்தும் அது உத்திரவிட்டது. இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவசரச் சட்டத்தை அப்போதைய அரசு பிறப்பித்தது. பின்னர், இதை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்காமல், ஆறு மாத காலம் இந்த அவசரச் சட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த அவசரச் சட்டம் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் இல்லாமலேயே நிறைவேறியது. மேற்கு வங்கத்தில் உள்ள இடதுசாரிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி நடத்த வேண்டிய நிலை அன்று இருந்ததால், மத்திய அரசு இப்படிப்பட்ட ஒரு முடிவை மேற்கொண்டது. இந்த முடிவு, அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2000–ல் ஆனந்த் சரூப் குழுவை நியமித்தது. அங்கீகாரமில்லாமல் போலியாக பி.எட். பட்டம் வழங்கும் கல்வி வியாபாரக் கடைகள் பற்றிய தகவல்களைக் கண்டறிவதற்காகத்தான் இது அமைக்கப்பட்டது. அரசியல் தலையீட்டினால் அதன் அறிக்கை கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்தக் கல்வி முறையைச் சீர் செய்ய எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 
NCTE – ஆரம்பக் கல்வியை உதாசீனப்படுத்தி, மேலும் மேலும் நடுநிலைப் பள்ளிக்கான ஆசிரியர் பயிற்சிக் கூடங்களுக்கு அனுமதி அளித்தது. கடந்த 15 வருடங்களாக NCTEஆசிரியர் தரத்திற்கோ அல்லது ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பு வரம்பிற்கோ எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை’ என்று, இக்குழு தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது. ‘இப்படி உள்ள சூழ்நிலையில் NCTE –ஐ வைத்திருப்பதில் என்ன பயன்? இதைக் கலைத்து விட்டு அதிகாரங்களைப் பல்கலைக் கழகங்களுக்குப் பகிர்ந்தளித்து விடலாம்’ என்று இந்தக் குழு கூறியிருப்பது மிகவும் பொருத்தமானது.

பானர்ஜி குழுவின் பரிந்துரையைப் பொருட்படுத்தாமல் NCTE இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. எந்த அதிகாரத்தையும், எந்தப் பல்கலைக் கழகத்திற்கும் கொடுக்காமல், தானே தன்னிச்சையாகச் செயல்படுகின்றது. ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்று தி.மு.க. சொல்லி வருகிறது. ஆனால், அது NCTE –ன் விஷயத்தில் தலையிடுவதற்குரிய வாய்ப்பு முந்தைய தி.மு.க. அரசுக்கு வந்தபோது, அதைப் பயன்படுத்த முன்வரவில்லை. இப்போதைய அரசு தலையிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆசிரியர் கல்வி முறையை மேம்படுத்த வழிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆசிரியப் பணியின் மேன்மையை மீண்டும் நிலைநிறுத்த முடியும்.

– பேராசிரியர் ஆர். சேதுராமன், துணை வேந்தர், சாஸ்த்ரா பல்கலைக் கழகம் 

No comments:

Post a Comment